Pages

Friday 16 January 2015

ஆம்பள - விமர்சனம்

சிரி என்றால் உடனே யாரும் சிரிக்க மாட்டார்கள். சில நொடிகள் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கூட அசால்ட்டாக சிரிக்க வைத்து போங்க போய் வீட்ல சந்தோஷமா இருங்க என்று ரிலாக்ஸ்ட் ஆக்கி அனுப்பி வைக்கிறார் சுந்தர்.சி.
விஷாலின் ஹைட்டுக்கு இன்னும் 100 மசாலாப் படங்கள் கூட சரியான செலக்‌ஷன் தான். அதே நேரம் விஜய் மாதிரி
ஒரே நூலைப் பிடித்துக் கொண்டு போனாலும் அப்புறம் பெட்டியை வாங்கிக் கொண்டு போன வினியோகஸ்தர்கள் வீட்டுக்கதவை தட்டும் நிலை ஒரே மாதிரியான மசாலாக்களில் வாய்ப்பிருக்கிறது. அதனால் அவ்வப்போது காரத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
பொதுக்கூட்டங்களுக்கு ஆள் சேர்க்கிற கூட்டத்துல இருக்கிற விஷாலுக்கு ஹன்ஷிகாவைப் பார்த்த உடனே லவ் மூடு ஸ்டார்ட். அத்தை பொண்ணுக்கு எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கணும்கிற மாதிரி பின்னாடி தான் தெரிய வருது ஹன்ஷிகா அவருக்குன்னே பொறந்த அத்தை பொண்ணுன்னு.
ஒரு குடும்பப் பிரச்சனையால அந்த அத்தைப் பொண்ணை கட்டிக்கிற சூழலுக்கு சிக்கல் வர சந்தானம், வைபவ், பிரபு, சதீஷ்ன்னு தன் படைகளோடு போய் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என டஜன் கணக்கில் தெரிந்த முகங்களோடு புழங்கி படம் முழுக்க அதகளம் பண்ணியிருக்கும் படம் தான் இந்த ஆம்பள…
என்னோட படங்கள்ல கதையே இருக்காது, பார்க்க வந்தா ஒரு ரெண்டரை மணி நேரம் ஜாலியா மனசு விட்டு சிரிச்சிட்டுப் போகலாம் என்று அடிக்கடி சொல்வார் டைரக்டர் சுந்தர்.சி. அதை அப்படியே இந்தப் படத்திலும் பிரதிபலித்திருக்கிறார். வழக்கமான மசாலா இத்யாதிக்குள் டஜன் கணக்கில் தெரிந்த முகங்களைப் போட்டு ஏகத்துக்கும் காரத்தை கூட்டி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
யோவ் என்னோட இடத்துக்கு நீ வந்துடுவியா என்று ஒரு அரசியல்வாதி விஷாலிடம் கேட்க நீங்க உங்க வேலையை ஒழுங்கா செஞ்சா நான் எதுக்கு உங்க எடத்துக்கு வரப்போறேன் என்று ஒப்பனிங் பஞ்சே பொலிடிக்கல் பஞ்ச் பேசி சூடு கிளப்புகிறார் விஷால்.
பணக்காரப் பொண்ணை லவ் பண்ணினா எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை ஒரே ஷாட்டில் சந்தானத்திடம் விஷால் சொல்லி முடிக்கும் போது ரொம்பத்தான் தேறிட்டாப்ல… என்று சொல்ல வைக்கிறார். அவருடைய உசரத்துக்கு லவ் சீன்களும், ஆக்‌ஷன் சீன்களும் தியேட்டரை அப்படியே அள்ளும் தான். அதில் கொஞ்சமும் குறையில்லை. அதற்காக கிளைமாக்ஸுக்கு முந்தையை பைட்சீனை இப்படியா ஜவ்வாக இழுப்பது…?
சில படங்களில் சந்தானம் இருந்தால் நன்றாக இருக்கும். சில படங்கள் சந்தானத்தாலேயே நன்றாக இருக்கும். ‘ஆம்பள’ இதில் முதல் வகை. முதல் பாதியில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சந்தானத்தை ஏட்டி லெவலுக்கு இறக்கி ஒரு டைமில் வேலையை விட்டே காலி செய்யும் விஷாலின் காதல் பளாஷ்பேக் சுந்தர்.சியின் இயக்கத் திறமைக்கு சான்று. அந்த இடத்தில் எடிட்டரும் அப்ளாஸ் வாங்குகிறார்.
பெரும்பாலான மசாலாப் படங்களில் முதல் பாதி காமெடியாகவும், இரண்டாம் பாதி சீரியஸாகவும் போகும். ஆனால் ‘ஆம்பள’ அப்படியில்லை… எண்டு டைட்டில் கார்டில் ஆட வரும் ஹிப் ஹாப் தமிழா பாடல் வரை ரசிகர்களை சிரிக்க வைத்து தான் அனுப்புகிறார்கள்.
ஆண்ட்டியான கிரணை பிகர் என்று நினைத்து சந்தானம் டாவடிப்பதும், பிறகு அந்த உண்மை தெரியவரும் காட்சிகள் எல்லாமே காம(நெ)டி.
சின்னச் சின்ன கேரக்டர்களுக்கு கூட பிரபு, விஜயகுமார் என பெரிய பெரிய நடிகர்களை கேரக்டராக்கி படத்தின் பிரம்மாண்டத்தை கோடிட்டி நிரப்பியிருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழனின் இசையில் எல்லாப் பாடல்களுமே அரைத்த மாவை கேட்பதைப் போல இல்லாமல் புதிய இசையாக ரசிக்க முடிகிறது. சின்னச் சின்ன சப்தத்தில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
படம் முடிந்து விட்டது என்று எழுந்தால் இன்பம் பொங்கும் வெண்ணிலா…வை ரீ-மிக்ஸ் போட்டு ஆடவிட்டுத்தான் அனுப்புகிறார் டைரக்டர் சுந்தர்.சி
கலகலப்பாக சிரிக்க வேண்டும், பாரமா இருக்கிற மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்னு நெனைக்கிறவங்க யோசிக்காம ‘ஆம்பள’யை ரசிக்கலாம். இப்படி சிரிக்கவே யோசிக்கிற மனிதர்களுக்கு மத்தியில் சிரிக்க வைப்பதற்காகவே யோசிக்கிறாரே..? அங்கு தான் ஈஸியாக ஜெயித்து விடுகிறார் சுந்தர்.சி

0 comments

Post a Comment