Pages

Thursday 15 January 2015

டார்லிங் சினிமா விமர்சனம்

நடிகர் : ஜீ.வி.பிரகாஷ் குமார்
நடிகை : நிக்கி கல்ரானி, ஸ்ருஷ்டி டாங்கே
இயக்குனர் : ஷாம் ஆன்டன்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைத்து, கதாநாயகராகவும் நடித்திருக்கும் படம் ''டார்லிங்''. புதியவர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில், காதல், திகில், சென்டிமெண்ட் கலந்த பேய்படமாக வந்திருக்கும் படம் தான் டார்லிங்.

கதிர் எனும் ஜி.வி.பிரகாஷ் குமாரை விழுந்து விழுந்து காதலிக்கிறார் புதுமுகம் நிஷா எனும் நிக்கி கல்ராணி. ஆனால் ஜி.வி. விலகி விலகி போகிறார். ஜி.வி. - நிஷாவின் காதலை கோர்த்து வைக்கும் முகமாக இருவருக்குமான நெருங்கிய நண்பர்கள் காமெடி கருணாஸ், பாலசரவணன் அண்ட் கோவினர், நிக்கி நிஷா - கதிர் ஜிவி. இருவரையும் புறநகரில் இருக்கும் ஒரு பங்களாவிற்கு அவுட்டிங் அழைத்து போகின்றனர். அங்கு போய் இறங்கியதும் ஜி.வி. பிரகாஷ், நிக்கியை தொடும்போதெல்லாம் நிக்கியின் உடம்பிற்குள் புகுந்து கொண்டிருக்கும் ஸ்ருதியின் ஆவி, ஜி.வி.யை அறைந்து அந்தரத்தில் தொங்கவிடுகிறது. நண்பர்கள் பாலசரவணன், கருணாஸ் உள்ளிட்ட உடன் வந்தவர்களையும் முகத்தை ஆக்ரோஷமாக மாற்றிக்கொண்டு அதட்டி, அறைந்து, ஆர்ப்பாட்டம் செய்கிறது.

நிஷாவிற்குள் புகுந்து கொண்டிருக்கும் ஸ்ருதி பேய் வேறு யாருமல்ல, அதே பங்களாவில் சில மாதங்களுக்கு முன் 'உட்பி' சிவாவின் கண்ணெதிரேலேயே ஐந்து அடாவடி இளைஞர்களால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணே தான். ஜி.வி.யிடம் அந்த ஆவி, ''உன் காதலியை நான் தொட விடாமல் செய்வதற்கு உனக்கு இவ்வளவு கோபம் வருகிறதே... என் காதலன் கண் எதிரேலேயே என்னை கற்பழித்து என்னையும், என் காதலன் சிவாவையும் கொடூரமாக கொலை செய்தார்களே... அவர்களை பழிவாங்கிவிட்டு வா, அதன்பின் உன் காதலியுடன் நீ சந்தோஷமாக இரு...'' என்று சொல்லாமல் சொல்கிறது ஸ்ருதி ஆவி.

ஜி.வி.பிரகாஷ், பாலசரவணன், கருணாஸ் ஆகியோர், அந்த ஐந்து பேரையும் தேடிப்பிடித்து ஸ்ருதி 'அலைஸ்' நிஷாவின் முன் நிறுத்தி பழிவாங்கினரா...? ஸ்ருதி ஆவி நிஷாவை விட்டு விலகியதா..? நிக்கி நிஷா, கதிர் ஜி.விக்கு கிடைத்தாரா...? என்பது தான் டார்லிங் படத்தின் திக் திக் திக்... பக் பக் பக்... மீதிக்கதை!

ஜி.வி.பிரகாஷ் தன் உருவத்திற்கும், உயரத்திற்கும் தாண்டி நிஷாவின் காதலன் கதிராகவே பிரமாதமாக நடித்திருக்கிறார். அவர் ஸ்கிரீனில் பயந்து நடுங்கும் போதெல்லாம் தியேட்டரிலும் ரசிகர்களின் அலறல் சத்தம் கேட்கிறது. கதாநாயகியுடன் அந்த மாவு பிசையும் சீனில் பிரமாதமாக நெருக்கம் காட்டி பிசைந்து, இசைந்து இருக்கிறார் பிரகாஷ். பார்த்து சார்... பாடகி வூட்டுக்காரம்மா கோச்சுக்க போறாங்க...!

பாலசரவணனும் தன் உதடுகள் பிரிவது தெரியாமல் அடிக்கும் டைமிங் கமெண்ட்டுகளில், ஆவி, பேய் பயத்தை எல்லாம் தாண்டி தியேட்டரே சிரிப்பில் அதிருகிறது.

தீணி பண்டாரமாக வரும் கருணாஸூம், மந்திரித்த முந்திரியெல்லாம் தின்று மந்திரவாதி நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட நண்பர்களை எல்லாம் பேயிடம் மாட்டிவிடுவது விலாநோக சிரிக்க வைக்கிறது.

ஜெய் சடகோபன் ரமேஷ் என்றபடி, ஆவி ஓட்ட ஒய்யாரமாக வந்து ஆவியிடம் சிக்கி திணறும் ஆவி வர்மா - நான் கடவுள் ராஜேந்திரனும் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்து கொள்கிறார்.

சிவாவாக வந்து காதலியை தன் கண் எதிரேலேயே பறிகொடுத்து தன் உயிரையும் விடும் மெட்ராஸ் பட நண்பர் அன்பு, உருக வைக்கிறார்.

நிஷாவாக, நாயகியாக அழகாக படம் முழுக்க வந்து தன் உடம்பில் ஸ்ருதி ஆவி புகுந்ததும், ஆபத்தாக கர்ஜனை செய்யும் நிக்கி கல்ராணி, பிஷாசாக வரும் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். அம்மணிக்கு பிரேட் ப்யூட்சரும் இருக்கிறது.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் ரசிகர்களை மேலும் மிரட்டுகிறது.

ஷாம் ஆண்டனின் இயக்கத்தில், பேய் படத்திற்கு டார்லிங் எனும் பெயரே பெப்பாக இருக்கும்போது மொத்தபடம் மட்டும் சோடை போய்விடுமா என்ன.?!

டார்லிங் பீதியை கிளப்புகிறது, பிரமாண்டமாய் இருக்கிறது, பிரமாதமாய் பயமுறுத்துகிறது.

மொத்தத்தில், ''டார்லிங்'' - டச்சிங்''

0 comments

Post a Comment