Pages

Monday 12 January 2015

எல்லோரையும் போல், நாலு டூயட்டுக்காக நான் நடிக்க வரவில்லை: பிந்துமாதவி

எல்லோரையும் போல், நாலு டூயட்டுக்காக நான் நடிக்க வரவில்லை. பிந்துமாதவி:

கன்னக்குழியில் கவனம் கலைக்கிறார்.... ஸ்பரிசங்களில் பவர் கூட்டுகிறார்.... நொடிக்கு நொடி பிந்து மாதவியின் தெற்றுப் பல் சிரிப்பால் சிதறுகிறது மனசு...




 பெரிய எதிர்பார்ப்பு இருக்கு... இருந்தும் விஜய், அஜித் லெவலுக்கு யோசிக்கவில்லை.... மாஸ் ஹீரோக்களுடன் நடிப்பதுதானே ஹீரோயின்களின் சினிமா டிரெண்ட்...?


 ""நான் நடிக்க வந்ததே பெரிய கதை. "சினிமாவுக்கு போறேன்'னு சொன்னதுக்கே என் அப்பா, அம்மா ஷாக் ஆகிவிட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி இரண்டு வருடங்களுக்குப் பின்புதான் சம்மதம் வாங்கினேன். அப்படி கிடைத்த வாய்ப்பை, நான் தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். "நல்ல சினிமாக்களில் நீ இருக்கணும்'னுதான் அப்பா ஆசீர்வாதம் செய்தார். மாஸ் ஹீரோக்களின் வாய்ப்புகள் வராமல் இல்லை. இருந்தும், நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் நிறைய வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன்.


 சினிமாவில் சின்சியராக இருக்க வேண்டும் என்பதை தவிர வேறேதும் எனக்கு ஆசை இல்லை. "வெப்பம்', "கழுகு', "சட்டம் ஒரு இருட்டறை', "கேடி பில்லா கில்லாடி ரங்கா' வரைக்கும் எல்லா படங்களுக்குமே இங்கே அடையாளம் இருக்கிறது. அந்தப் படங்களில் நான் இருந்திருக்கிறேன். யாருக்கும் தெரியாத படங்களில் ஒன்றும் நான் நடிக்கவில்லையே?


 அடுத்து "தேசிங்கு ராஜா'. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். பிடிக்கிற மாதிரியான படங்களில் இருப்பதுதான் எனக்கும் பிடிக்கும். பெரிய ஹீரோக்களோடு நடிக்க வாய்ப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம். எனக்கு என் வளர்ச்சி மட்டுமே முக்கியம் இல்லை. நடிப்பதில் உள்ள திருப்தியும் முக்கியம்.''





 இவ்வளவு பிடிவாதமான பேச்சு பேச தைரியம் வேண்டும்... விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவங்க சில பேர்தான் சூப்பர் ஸ்டார் ரேஸிஸ் இருக்காங்க... இவர்களில் யார் கூட நடிக்க ஆசை...?


 ""அஜித்... எனக்கு ரொம்பவே அவரைப் பிடிக்கும். அவரின் உழைப்பு, எளிமை பற்றியெல்லாம் சினிமாவில் சிலாகித்து பேசாதவர்களே இல்லை. அதனால் அஜித்துக்கு நான் தீவிர ரசிகை. அஜித் படம் வந்தால், ஏதோ ஒரு தியேட்டரில் முதல் ஷோவில் விசிலடித்து படம் பார்க்கும் கூட்டத்தில் நானும் இருப்பேன். அந்தளவுக்கு அஜித் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவே எனக்கு ஆசை. மற்றபடி "எல்லா ஹீரோக்களும் பிடிக்கும்; எல்லோருடனு நடிக்க ஆசை' என்று ஜால வார்த்தைகள் பேச தெரியாது.


 விஜய் சாரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். "சட்டம் ஒரு இருட்டறை' ஷூட்டிங்கின் போது, ஸ்பாட்டுக்கு வந்து நின்றார். அத்தனை சர்ப்ரைஸ். அன்றைக்குத்தான் டூயட் ஷூட் நடந்தது. ஒவ்வொரு ஸ்டெப்பாக நான் டான்ஸ் ஆட, விஜய் சார் முன்னாடி நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போது, எனக்கு உதற ஆரம்பித்து விட்டது. "சார்... நீங்க இருந்தா டான்ஸ் ஆட முடியலை'ன்னு சொன்னேன். "அதெல்லாம் சும்மா.. ஆடுங்க'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னார். அதன் பின் என் டான்ûஸப் பார்த்து விட்டு சூப்பர்ன்னு பாராட்டினார். என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத வார்த்தை அவை.''





 "தேசிங்குராஜா' பட ஸ்டில்கள் அவ்வளவு லவ்லியா இருக்கே...?


 ""ஆமாம், நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க... படத்திலும் விசேஷம் இருக்கிறது. விமல், சூரி என பக்கா காமெடி பேக்கேஜ் படம். நான் தாமரை என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படத்தைப் பற்றி இன்னொரு ஸ்கூப் நியூஸ் சொல்லுகிறேன். நான் ரஜினி சாரின் தீவிர ரசிகையாக வருகிறேன். ரஜினி சார் படம் வந்தாலே, டிக்கெட் கவுண்டரில் ஏறி, குதித்து டிக்கெட் எடுக்க அதகளம் செய்யும் பெண்ணாக வருகிறேன். உண்மையில் அது மாதிரி பொண்ணுதான் நான். எப்போதும் ஒரு திமிர் இருக்கும். அதை அப்படியே சினிமாவுக்காக நடிக்கும் போது நன்றாக இருந்தது. நான் ரொம்ப ஜாலியாக நடித்த கேரக்டர்.''





 உங்கள் ரோல் மாடல் யார்...?


 ""அனுஷ்கா பிடிக்கும். அவங்க ஸ்க்ரீனில் வந்து நின்றாலே ஒரு பரபரப்பு வந்து விடும். சூப்பர் ஹீரோயின். உயரம், கலர், சிரிப்பு என எல்லாமே பிடிக்கும். ஹீரோக்கள் ஒவ்வொருத்தருக்கும் அனுஷ்கா கூட படம் நடிக்க ஆசை இருக்கிறது. அதுதான் அனுஷ்காவின் வெற்றியின் ரகசியம். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.''





 உங்க சினிமா லட்சியம் என்ன...?


 ""எல்லாப் படங்களிலும் நடித்து விட்டு போக ஆசை இல்லை. ஆனால் பிந்துமாதவி நடித்தால் அந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷலாக மாற வேண்டும். ஹீரோயின் தாண்டி எல்லோரையும் கவர்ந்திழுக்க வேண்டும். உதாரணத்துக்கு அனுஷ்கா.


 "வெப்பம்' படத்தில் கால் கேர்ள் பாத்திரத்தில் வந்தேன். முதல் படத்திலேயே எப்படி இந்த தைரியம் என்றார்கள்... இதில் என்ன இருக்கு... நான் எல்லோரையும் போல், நாலு டூயட்டுக்காக நடிக்க வரவில்லை. எனக்கென ஒரு இடம் வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன்.


 புராண படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. அது போல் நடனத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் முழுக்கவே நடனம் ஆடி நடிக்க வேண்டும். இதுவெல்லாம்தான் என் லட்சியங்கள். பார்ப்போம் நடக்குதா என்று.''





 பிந்து சாகர் எனப் பெயரை மாற்றப் போறீங்கன்னு சொன்னாங்களே...?


 (தெற்றுப்பல் சிரிப்பு மறைகிறது). ""என் அண்ணன் சாகர். அவன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒரு நாள் அம்மாவிடம் இருந்து போன். "அண்ணன் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான். சீக்கிரம் வா'ன்னு அழுதுகொண்டே சொன்னார்கள். அலறிடித்துக் கொண்டு ஓடினேன்.


 என் அண்ணன் இறந்து ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகி விட்டது. அம்மா "சாகர்... சாகர்...'ன்னு சொல்லி உருகுறாங்க. அதனால்தான் சாகரை என் பெயரில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டேன். இது என் குடும்பத்துக்கான ஆறுதல்.


 அவன் பெயரில் ஒரு டிரஸ்ட் உருவாக்கப் போகிறேன். ஏழை குழந்தைகளின் கல்விக்காக நிறைய உதவிகளை அந்த டிரஸ்ட் மூலம் செய்யவேண்டும். என் அண்ணன் ஐ.ஏ.எஸ். படிக்க நினைத்தான். அதனால் அந்த டிரஸ்ட் மூலம் நிறைய ஐ.ஏ.எஸ்.களை உருவாக்கப் போகிறேன்.''





 ஹன்சிகா, காஜல் என ஹீரோயின்கள் எல்லோருக்கும் இப்போது லவ் ஜூரம்...? உங்களுக்கும் அப்படி எதாவது மேஜிக் நடந்ததா...?


 ""எல்லோரிடமும் ஈஸியாக பழகி விடுவேன். அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்களாக இருந்தாலும், ஃப்ரெண்ட் பிடித்து விடுவேன். அப்படிப் பார்க்க போனால் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்.


 காதல் பற்றி எனக்கு நிறைய புரிதல் இருக்கிறது. அது தவறான இடத்தில், தவறான ஆளிடம் வந்து விடக் கூடாதென தெளிவாக இருக்கிறேன்.


 காதல் கல்யாணத்தில் இருக்கிற நம்பிக்கைகள் சில இடங்களில் நடக்கும் விஷயங்களைப் பார்க்கும் போது, உடைந்து போகிறது. சிலரைப் பார்க்கும் போது, காதல் அற்புதம் எனத் தோன்றுகிறது. அது எப்படிப்பட்டது என்பதை அனுபவித்தால்தான் தெரியும். அந்தப் பக்குவம் என் வயதிலும், மனதிலும் வரும் போது, காதல் பற்றி நிறைய பேசலாம். அதுவரைக்கும் நான் சினிமாவைக் காதலிக்கிறேன். ஓ.கே.வா...?

0 comments

Post a Comment