Pages

Saturday 17 January 2015

டார்லிங் விமர்சனம்


தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு பேய் மீதுதான் மோதிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு புரொஃபைலுடன் வந்து ரசிக்கவே வைக்கிறது.
அதிலும், பயமுறுத்தும் படங்களெல்லாம் சிரிக்கவைக்கும் ட்ரெண்டுக்கு மாறியபின் இப்போதெல்லாம் பேய்ப்படங்களை மட்டும்தான்
குழந்தைகளுடன் சென்று குதூகலித்து ரசிக்க முடிகிறது. அந்த வகையில் இன்னொரு ‘டார்லிங்’காகிறது சாம் ஆன்டன் இயக்கியிருக்கும் இந்தப்பேயும்.
படத்தில் சென்டர் ஆஃப் அட்ராக்க்ஷன் ஆகி இருப்பது ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளராக இருந்த இவர், இதில் முதன்முதலாக ஹீரோ ஆகியிருப்பது பேயைத் தாண்டி, அவர் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அவரும், ஹீரோயிஸம் தூக்கலாக ஆகாமல் தன் இளமைக்கும், தோற்றத்துக்கும் ஏற்ற ஹீரோ ஆகியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. தாடையில் பதிய விட்டிருக்கும் சின்ன தாடி, அவருக்கு ஒரு மெச்சூரிட்டியைத் தந்திருப்பது நிஜம்.
அந்தக் கேரக்டருக்குள் இழையோடும் சோகத்தை எளிதாக வெளிக்காட்டியிருப்பதுடன், பயந்து நடுங்க வேண்டிய இடத்தில் நடுங்கி, பாய வேண்டிய இடத்தில் பாய்ந்து அளவுடன் ரசிக்க வைக்கிறார் ஜி.வி. அவரே இசையமைப்பாளராகவும் ஆனதில், நெடுக பயணம் செய்த ஸ்கிரிப்டின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதிலும் ஸ்கோர் செய்கிறார். ‘வந்தா மல…’, ‘உன் விழிகளில்…’, ‘அன்பே…’ பாடல்கள் படத்தின் தரத்தை உயர்த்திப் பிடிக்கின்றன.
எல்லா பேய்ப் படங்களிலும் பிரதானமாக இருக்கும் ‘ரிமோட் பங்களா’ இதிலும் உண்டு. அதில் வந்து தங்கித் தற்கொலை செய்ய நினைக்கிறார் காதலில் தோற்ற ஜி.வி.பிரகாஷ். அவருடன் தற்கொலை செய்துகொள்ள முன்வரும் அவரது நண்பர் பால குமாரன், தங்களுடன் ‘குரூப் தற்கொலை’ செய்துகொள்ள இன்னொரு யுவதியான நிக்கி கல்ராணியையும் அழைத்துவர, அந்த ‘சூசைட் குரூப்’பில் எதிர்பாராத விருந்தாளியாக வந்து இணைந்து கொள்கிறார் கருணாஸ்.
சாவதானமாக ஆரம்பிக்கும் கதையில், ஜி.வியை தற்கொலையிலிருந்து மீட்பதுடன், நிக்கியை அவருடன் இணைந்து வைக்க பாலா போட்டிருக்கும் திட்டம் தெரிய வரும்போது நிமிர்ந்து உட்கார முடிகிறது. அந்தத் திட்டம் வெற்றியடைந்து, ஐஸ் நழுவி ஸ்காட்ச்சில் விழும்நேரம் ‘பேயிங் கெஸ்டை’ப் போல் நிக்கி மீது ஒரு பேயும் குடிகொள்ள, அங்கிருந்து திரில்லெடுக்கிறது திரைக்கதை.
அந்தப் பேயை ஒவ்வொருவராக எதிர்கொண்டு, அதை விரட்ட ஒவ்வொருவராக முயன்று முழிபிதுங்கும் காட்சிகள் ஜாலி ரெய்டு. அதிலும், பேயை விரட்ட வரும் ‘கோஸ்ட் கோபால் வர்மா’வாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இடம்பெறும் காட்சிகள் சிரித்து சிரித்தே ஜீவனை விட வைக்கின்றன.
பேய் மேக்கப் போட்டுக்கொள்ள ஒத்துக்கொண்ட நிக்கியின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். அழகான கால்கள் கொண்ட நிக்கியை அங்குலம் விடாமல் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரும், உடையலங்கார நிபுணரும் ரசனை மிக்கவர்கள். படம் நெடுக ஜி.வியின் நண்பனாக வரும் பாலா, தன் நகைச்சுவையால் கவர்ந்தாலும், அவரைவிட ரசிக்க வைப்பவர் அனுபவம் மிக்க கருணாஸ்தான்.
அங்கங்கே அவர் திட்டும் ‘நார்னியாஸ், அபோகலிப்டோஸ்’ வசனங்ககள் நச். முதல்முதலாக அவர் பேயை எதிர்கொள்ளும் காட்சியிலும், ‘கோஸ்ட் கோபால் வர்மா’வாலேயே விரட்ட முடியாத பேயைத் தான் ஓட்டிவிட முடியுமென்று அவர் எடுக்கும் முயற்சிகளும் அதகளம்..!
பேய் உருவான காரணம் சொல்லும் பிளாஷ்பேக், அதுவரை பேய் மீதிருந்த பயத்தைப் போக்கி பரிதாபத்தை ஏற்படுவது சென்டிமென்ட் ‘டச்’.
டார்லிங் – குடும்பத்துடன் எதிர்கொள்ள முடிகிற குதூகலப் பேய்..!

0 comments

Post a Comment